சனி, ஜனவரி 01, 2011

பைசல் கவிதைகள்


பைசல் கவிதைகள்


என்னருமை காதலிக்கு

என்னருமை காதலிக்கு
நாட்கள் தண்ணீர் ஊற்றினாற்போல் வளர்ந்துகொண்டுபோகிறது
நாட்கள் தண்ணீர் இல்லாததுபோல் வாடி வதங்கிப்போனது
இப்போதெல்லாம் ஏன் நீ அருமையாக பேசுவதில்லை
என்னில் என்ன குற்றத்தை கண்டுபிடித்தாய்
நீ என்னை தண்டிக்க முடியாது
அது இறைவனுக்குரிய தகுதி

என்னருமை காதலிக்கு
என் கவிதை விளங்காத காரணத்தினால்தான் என்னை நீ விரும்பினாய்
அதை விளங்கிக்கொள்வதற்காகவா இல்லை
என் விரல்களை உடைப்பதற்காக
இப்போதுதான் தெரிகிறதா நான் விரல்களால் கவிதை எழுதுவதில்லையென்று

என்னருமைக் காதலிக்கு
உண்மையாக எனக்கு சந்தோசமாக இருந்தது
உனக்கு குழந்தை பிறந்திருப்பதாக தொலைபேசியில் சொன்னாய்
நீ எனக்கு ஓதிக்காட்டிய மந்திரத்தை மீண்டும் ஓதப்போகிறாய்
என்று எண்ணியே பேசத்தொடங்கினேன்
ஆண் குழந்தை என்று தொடுங்கினாய் மந்திரத்தை

என்னருமை காதலிக்கு
உனது குழந்தை இப்போது நடை பழகிவிட்டனவா?
நீ கூப்பிடும்போது பிஞ்சுக் கால்களால் நிலத்திற்கு நோகாமல்
நடக்கின்றனவா?
ஆம் என்று நீ சொன்னால் அது பொய்
நான் நிலத்துடன் பேசப்போகிறேன்
பிஞ்சுக்கால்கள் உன்னில் படும்போது வலித்தனவா?
என்று கேட்பதற்காக வெளியே இறங்கிச் செல்கிறேன்



என்னருமை காதலிக்கு
தாகத்தோடு வருகிறேன்
வெளியில் வெயில்
மரங்களிருந்தும்இஅதில் கனிகள் இருந்தும்
தாகத்தோடு வருகிறேன்
உன் வீட்டில் தண்ணீர் இருக்கும் என்ற நம்பிக்கையோடும்
நீ பாத்திரத்தில் நிறைத்து தருவாய் என்ற நம்பிக்கையோடும்
உனக்கு தெரியாமலே என்னை இன்னும் நீ காதலிக்கின்றாய்
என்ற உண்மை நீ கொடுத்த தண்ணீரில் எனக்குத் தெரிந்தது காட்சிகளாகவும்

என்னருமை காதலிக்கு
நிலத்திற்கும் எனக்குமிடையே நடந்ததை
உனக்கு சொல்லவேண்டும்
நீ கேட்பாயா?
துணிந்து இதை உன் கணவரோடு பகிர்ந்துகொள்
இலகுவில் அவர் கவிஞனாக மாட்டார்


நிலத்தோடு பேசுகிறேன்



நான் போகிறேன்
நிலத்தைச் சந்தித்து பேசப்போகிறேன்
பலகாலமாக நிலத்தினது கதவு மூடப்பட்டிருந்தது
நான் வந்திருக்கும் தகவலறிந்து ஒருவர் கதவைத் திறந்தார்
இவரை இதற்கு முதல் எங்கேயோ பார்த்திருக்கிறேன்
உள்ளே வரும் அனுமதி
இன்னும் உங்களுக்கு தரப்படவில்லை
நீங்கள் திரும்பிப்போகலாம்
என்று அவர் சொல்லிவிட்டு கதவை மூடிச்சென்றார்
கொஞ்சம் நில்லுங்கள்
என்னருமை காதலியின் ஆண்குழந்தை
தன் பாதங்களால் நிலத்தை ஊன்றி நடக்கிறான்
உங்கள் நில மகாராசாவிற்கும்
மகாராணிக்கும் வலித்தனவா? என்று கேட்பதற்காகவே
நானிங்கு வந்தேன்
என் கதையை கேளுங்கள்
ஏன் கதவை மூடுகிறீர்கள்
கதவைத் திறந்து சத்தமாக சிரிக்கிறார்
நிலத்தின் மீது கதவை தயார் செய்பவர்கள் மனிதர்கள்தானே
என்று சத்தமாக சிரிக்கிறார்
என்னால் நிற்க முடியவில்லை
ஆடுகிறேன் போதைகொண்டவன்போல்