ஞாயிறு, ஜனவரி 02, 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு: ஒரு புதுக்கதை


றியாஸ் குரானா

கடந்த காலங்களில் அதிகமும் பேசப்பட்ட விசயமாக, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை சொல்லலாம். ஆதரவாகவும், எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கையெழுத்திட்டு வெளியிடும் நிலை வரை இந்த மாநாடு பற்றிய உரையாடல்கள் நீண்டிருக்கின்றன. 

இலங்கை அரசு சார்பானது அல்லது அரசு சார்பாக மாறிவிடக்கூடியது என்ற ஊகங்களும், அச்சங்களும், எதிர்ப்பவர்களின் முன்வைப்புக்களாக அமைந்திருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து சர்வேதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை வரவேற்பவர்கள், சர்வதேச தமிழ் எழுத்தாளர்களுக்கிடையிலான சிந்தனைப் பரிமாற்றம், சமூகங்கள் இடையிலான பகை மறப்பு என பல விடயங்களை சாத்தியப்படுத்த இந்த மாநாடு பயன்படும் என முன்வைத்திருக்கின்றனர். 

சிறு கதையாடல் சமூகங்களின் பால் சாய்வு கொண்டு செயற்படும் எங்களுக்கு இந்த மாநாட்டை ஆதரிப்பதே முக்கிய தேர்வாக இருக்கிறது. சர்வதேச தமிழ் எழுத்தாளர்களிடம்ளூ ஈழத் தமிழ் அரசியல், மற்றும் ஈழத்து இலக்கியம் போன்ற கதையாடல்களிலும், அவை தொடர்பான புரிதல்களிலும், வெளியிலே வைத்துப் பார்க்கப்படு;கின்ற சிறு சமூகங்கள் தமது கதைகளை பேசுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும், இது முக்கிய தருணமாக அமையும் என்றே நம்பியிருந்தோம்.அதுவே இந்த மாநாட்டை ஆதரிப்பதற்கான மிக முக்கிய காரணம். எமது எதிர்பார்ப்பு கலைந்து போகும்படி மாநாட்டு ஏற்ப்பாடுகள் தெரியவருகின்றன.ஆகவே பறக்கணிக்கப்பட்ட சிறுகதையாடல் நிலைப்பட்டவர்கள் தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் எனக் கருதுகிறோம். எமது எதிர்ப்பை துண்டுப் பிரசுரமாகவும்,
மாநாட்டு மேடைக் குறுக்கீடாகவும் நிகழத்தத் திட்டமிட்டுள்ளோம்.எமது நிலைப்பாடுகளுக்கு இந்த மாநாட்டை எதிர்க்கின்ற மற்றும் ஆதரிக்கின்ற இருதரப்புகளிடமிருந்தும் ஆதரவு கிடைக்குமென்று கருதுகின்றோம்.அப்படி கருதுவதற்கான காரணங்களை இவ் இரு தரப்பினரினதும் அறிக்கைகளில் எம்மால் கண்டுகொள்ள முடிகிறது. 

மாநாட்டை எதிர்ப்பவர்கள் தமது அறிக்கையை ஷஷவரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்கு முறைக்கு எதிர்வாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்பு நிலை எடுத்திருக்கிறார்கள்|| என்று ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் ஒடுக்கப்பட்ட, படுகின்ற சமூகங்கள், மக்கள் போன்றவர்களுக்கு ஆதராவாக செயற்படுவர்கள் என்ற ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள.; அது போல இந்த மாநாட்டை வாரவேற்பவர்கள் ஷஷஇலங்கையின் எல்லாச் சமூகத்தளங்களிலும் இருந்தும் எழுத்தாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்க வேண்டுமென விரும்புகிறோம். குறிப்பாக தலித்துகள், பெண்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் போன்ற விளிம்புநிலையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்நிலைப்படுத்தப்பட வேண்டுமென மாநாட்டு அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.|| என தமது அறிக்கையினை முடித்திருக்கின்றனர்.

ஆக, இருதரப்பினரும் ஒடுக்கப்பட்ட மக்களின்பால் கரிசனம் கொண்டவர்கள் என தம்மை வெளிப்படுத்தியிருப்பதை அறிய முடிகிறது. இந்த இருதரப்பினரும் ஈழத்து இலக்கிய மற்றும் அரசியல் கதையாடல்களுக்குள் விளிம்பு நிலையில் வைத்துப் பார்க்கப்படும் சிறு சமூகங்களின் அரசியல் இலக்கியச் செயற்பாடுகளுக்கு ஆதரவாக என்ன செய்யப்போகிறார்கள்?