வியாழன், ஜனவரி 06, 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் நாங்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

இப்போதுதான் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலிருந்து வந்தேன்.
நேற்று பின்னேரம் 5 மணிக்கு தொடங்கிய பயணம். இன்னும் உறங்கவில்லை.
மிகவும் களைப்பாக இருக்கிறது. இப்போது ஊருக்கு போக தயாராகிக்கொண்டிருக்கிறன்.
கொஞ்சம் தூங்கவேண்டும் தூங்கட்டா...
அது சரி நீங்கள் மாநாட்டில் பெரிசா என்னவெல்லாம் செய்வதாக சொன்னீர்களே
என்னவாச்சு என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
ஆம் தோழமைகளே எங்களால் மாநாட்டில் துண்டுப்பிரசுரம் ஒன்று கொடுக்கப்பட்டது.
மேடைக் குறுக்கீடு செய்வதை நண்பரகள் விரும்பவில்லை என்பதால் கைவிடப்பட்டது.
அந்த துண்டுப்பிரசுரம் இதுதான்....
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் நாங்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரம்


நாங்களும் இருக்கிறம் 

மாற்றுப்பிரதி 

www.maatrupirathi.blogspot.com – maatrupirathi@gmail.com

அயல் நாடுகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கும் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே அரசியல்இ இலக்கியச் சிந்தனைப் பரிமாறலை சாத்தியப்படுத்துவதோடு அவர்கள் எதிர்காலத்தில் இணைந்து பல்வேறு இலக்கிய அரசியல் பணிகளை முன்னெடுக்கவும் இந்த மாநாடு வாய்ப்பளிக்கும் என நம்பியிருந்தோம். ஆனால் இன்று கொழும்பில் நடாத்தப்படுகிற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒரு குழுநிலை அளவிலான செயற்களத்தைக் கொண்டதாகவே உணர முடிகிறது. விரிந்த தளத்தில் இதன் உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்குமானால் இந்த மாநாட்டின் செம்மையும் விரிவும் முக்கியத்துவமும் வேறாக அமைந்திருக்கும். அப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமுமாகும்.

'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு' என்ற அடையாளப்படுத்தல் அனைத்துத் தரப்பினரையும் ஏகமாகக் கொண்டிருக்கிறது. அதேவேளை இந்தப் பொது விளிப்பின் கீழ் முக்கியமான விடயங்கள் விடுபட்டுள்ளன. குறிப்பாக கடந்த 25 ஆண்டுகால எதிர்ப்பிலக்கியம் அல்லது ஜனநாயகத்துக்கான போராட்டம் எனக்கருதும் இலக்கியமும்இ அத்தோடு இருபெரும் கதையாடல்களுக்கு எதிரில் செயற்பட்ட முஸ்லிம்கள்இ என்றைக்குமாக மலையைச் சுமக்கும் மலையக மக்கள்இ தலித்கள்இ போராளிகளாக தம்மை அறிவித்துக்கொண்டவர்கள்இ பிற உதிரிகள் ஆகியோரை உள்ளடக்கிய விளிம்புநிலை இலக்கியச் செயற்பாடுகள் கவனத்திற் கொள்ளப்படவில்லை. 

இந்த இலக்கியப் போக்குகளே கடந்த கால் நூற்றாண்டுகாலத்தின் மையப் போக்காகவும் பெரும்போக்காகவும் இருந்துள்ளன. பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் சவால்களை எதிர்கொண்டவாறு இந்த இலக்கியப் பங்களிப்பினை ஒடுக்குமுறைகளுக்கெதிராக வழங்கிய படைப்பாளிகளும் அவர்களுடைய படைப்புகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநாட்டின் பிரதான ஒருங்கிணைப்பாளர் திரு. முருகபூபதியுடன் பேசியபோது அவர் நெகிழ்ச்சியோடு இந்த விடயத்தை அணுகியிருந்தாலும் இறுதிவரையில் மாநாட்டில் இந்த பிரதான இலக்கியப் போக்குகளுக்கான அரங்குகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை. வேண்டுமானால்இ கட்டுரையை மட்டும் வாசிப்பதற்கான வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக திரு. முருகபூபதிக்கு நன்றிகள்.

ஆனால்இ விளிம்பு நிலை மக்கள் அல்லது மற்றமைகள் எப்போதும் பொது விளிப்பினுள்; அமிழ்த்தப்படுவது அல்லது புறக்கணிக்கப்படுவதே வழமையாக உள்ளதை இந்த மாநாடும் உறுதி செய்துள்ளது. இத்தகையதொரு புறக்கணிப்பானது இந்த மாநாட்டின் முழுமைப்பாட்டைச் சிதைப்பதுடன் பல கேள்விகளையும் எழுப்புகின்றது. முக்கியமாக 11 விடயங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் இந்த மாநாட்டின் அரங்குகளில் பெண்கள் தவிர முக்கியமான விடயங்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது நம்பிக்கையீனத்தையும் தொடர்ந்து அனைத்துத் தரப்புகளோடும் போராடவேண்டும் என்ற எண்ணத்தையுமே ஏற்படுத்துகின்றன.

சம்பிரதாயபூர்வமான நிகழ்ச்சிகள் கதையாடல்களிலிருந்து விலகியிருப்பதையும் அர்த்தபூர்வமான உண்மைத் தளத்தை நோக்கிய எழுத்துப் பங்களிப்பை வழங்க முயற்சிப்பதனாலும் மாற்றுப்பிரதி மற்றும் மற்றமைகள் இந்த மாநாட்டை முழுமையாகக் கருதவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து கொள்கின்றன.

தமிழ் இலக்கியம்இ ஈழத்து இலக்கிம் போன்று இலக்கியச் செயற்பாடுகளை நெகிழ்ச்சியற்ற முறையில் பொதுமைப்படுத்துகின்ற இறுக்கமான வரையறுத்தல்களை புறக்கணிக்கிறோம். இவ்வகைப் பொதுமைப்படுத்தல்களுக்குள் மறைத்தொதுக்கப்படுகின்ற சிறுகதையாடல்களின் பக்கம் நாம் செயற்படவிரும்புகிறோம். இலக்கியம்இ அரசியல் போன்ற வெளிகளில் சிறுகதையாடல்களுக்கான உரிய இடத்தைக் கோருகின்றோம். அதற்கான இடம் வழங்கப்படாத இம் மாநாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.