வெள்ளி, மார்ச் 11, 2011

சசியின் கவிதை நூல் வெளியீடு

இந்த மண்ணின் பெருமைக்குரிய கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் 'சிதைந்து போன தேசமும்,தூர்ந்து போன மனக் குகையும்' கவிதை நூல் வெளியீடு 19 .03 .2011 ,சனி பி.ப. 4 மணிக்கு, கல்முனை கிறிஸ்த இல்லத்தில்.
'கல்முனை கலை,இலக்கிய நண்பர்கள்' இந் நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கிறார்கள்.இலக்கிய நேசர்கள் கலந்து கொள்ளலாம்


வீழ்ச்சி

காய்ந்த சருகு போல் ஓரு மண்புழு
ஊர்ந்து கொண்டிருந்தது படியோரம்.
நான் மனிதன் என்ற இரக்கம் மீதுர
அதனைப் பார்த்து விட்டுப் போனேன் ஒரு கணம்.
சுர் என்று சருகு இரைதல் போல் கேட்டது,
திரும்பிப் பார்த்தேன் -
மண்புழு வாலில் நின்றது...
வாயைத் திறந்தது கூரிய பல் தெரிய.
நாக்கு எங்கே என நினைக்கையில்,
நாக்கிலிருந்து தீச்சுவாலை பறந்தது.
மண்புழுவுக்குப் பல் ஏது? நாக்கு ஏது?
நினைக்கையில் தெரிந்தது மண்புழு உருமாறி
விட்டதென்று
எனினும் அஞசவில்லை.
குனிந்தேன் தடி எடுக்க.
நிமிரும் போது
மண்புழுவின் கையில் துப்பாக்கி இருந்தது.
அல்ல,
ஒரு பாம்பின் கைத்துப்பாக்கி.
அதுவும் அல்ல,
ஒரு சிப்பாயின் கைத்துப்பாக்கி.
நான் குனிந்து,
பாம்பாய் நெளிந்து
காய்ந்த சருகின் மண்புழு ஆகி
ஊர்ந்து கொண்டிருக்கிறேன் படியோரம்.
(1992)

-உமா வரதராஜனுக்கு
நன்றிகள் -