திங்கள், ஜனவரி 30, 2012

நாட்கள்


  பைசால்

நாட்கள் ஒரு மந்திரம்
ஏட்டில் இருக்கின்ற உயிரற்ற சிசுக்கள்

நாட்களின் மீது
நாட்களோடு கலந்திருக்கின்றன
வெளிச்சமும், இருளும்

நாட்களை
எனது கைகளினால் பிடிப்பதற்காக
பின்தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றேன்

நாட்களின் நகல் நேரம்
மணி என்றும் சொல்வர்

நாட்களை
சிலுவையில் அறைந்து
சித்திரவதைப் படுத்துகின்றனர்
மணிக்கூடு என்று சாட்டுப் போக்குச் சொல்லி

என் வீட்டில்
நாட்களின் சித்திரவதை முகாம் இல்லை

இன்னமும்
என் கைகளால் பிடிக்க முடியவில்லை
நாட்களை
என் கைகளும், கால்களும்
பலம் கெட்டுக் கிடக்கின்றன
எந்த மைதானத்தில் ஓடுகின்றன
அஞ்சலோட்டம்

நாட்களின் கையில் இருக்கின்றது
மந்திரம் எனும் பொல்லு

நாட்கள் எனும்
உயிரற்றுப்போன சிசுக்களின் பெயர்கள் கீழே

இன்று
நேற்று
நாளை

நாட்களுக்கு உயிர் இருக்கின்றது
என எழுதலாமென நினைக்கின்றேன்
அப்படியானால்
நாட்களுக்கு உருவம்
பகல்
இரவு

இப்போது
நான்,என் சுற்றத்தார் அனைவரும்
நாட்களில் வசிக்கின்றோம்

கொழுத்த உடல்
சாவதிலும், பிறப்பதிலுமான வலியை
நாட்களால் மட்டும் உணர முடிகின்றது