வியாழன், மே 03, 2012

இரு இணைய இதழ்கள்


''இந்த இணைய இதழ் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கானதல்ல. எல்லோரும் பங்கேற்க இடமளிக்கும் இதழ்''
இந்த அறிவிப்போடு ''மலைகள்'' இணைய இதழ் இந்த மாதத்திலிருந்து வெளிவருகிறது.
''அனைத்து சமூக சக்திகளையும் எழுதுமாறும் கருத்துக்களை பதிவிடுமாறும் அழைக்கிறோம்!''
என்ற அறிவிப்போடு '' எதுவரை'' இணைய இதழும் இந்த மாதத்திலிருந்தே வெளிவருகிறது.
சிபிச்செல்வன் ஒன்றையும், ஆசிரியர் குழு என இருப்பினும் ஆசிரியராக எம்.பௌஸரும் நடத்துவதையிட்டு மகிழ்வாகவே இருக்கிறது.
இருவரும் மிகத் தேர்ச்சியுள்ளவர்கள் என்பதால் எதிர்பார்ப்புக்கள் உருவாகின்றன.
இந்த அனைத்து சக்திகளும், எல்லா வட்டத்தினரும் - என்பதை சாத்தியப்படுத்தாது போகுமானால்,
ஒரு குழுவாக எஞ்சிவிடவும் சாத்தியமிருக்கிறது. அதற்கு மாறாக, கவிப்பேரரசு வைரமுத்து என 'உயிர்மை' கொண்டாடும் நிலைவரை இந்தப் புரிதல் இட்டுச் செல்ல வாய்ப்பிருக்கிறது.
அந்த இணைய இதழ்களை இங்கு படிக்கலாம்.
அனைத்துச் சமூகச் சக்திகளும், எல்லா வட்டத்தினரும் ஓரிடத்தில் பங்களிப்புச் செய்வதிலுள்ள குழப்பங்களும், சிக்கல்களும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். தேர்வு என்ற ஒரு அம்சம் இருக்கும்போது,
அனைத்து சக்திகள், எல்லா வட்டங்கள் என்பது மிக முரண்பாடான ஒன்றாகிவிடும். ஒவ்வொரு வகைச் செயற்பாட்டாளர்களும், அவர்களின் எழுத்துக்களும் சூழலில் நிலவுவதற்கான இடத்தை அங்கிகரிப்பதை இந்தக் கருத்தாக்கத்தினூடாக நான் புரிந்துகொள்கிறேன். எண்ணற்ற எழுத்தாளர்களும், பலபோக்குகளும் தத்தமது பங்களிப்பை செய்யும் சூழலை ஏற்பதற்கும், அவை அனைத்தும் ஓரிடத்தில் திரள்வதற்குமிடையிலான சிக்கல்களையும் வித்தியாசங்களையும் இந்த இடத்தில் கவனஈர்ப்பைச் செய்ய விரும்புகிறேன். அத்தோடு வன்முறை சார்ந்தது எனக் கருதும் எழுத்துக்கள் தொடர்பில் உரையாட வாய்ப்பளிக்கும் ஒரு இடமாகவும் இது அமையுமென்று நம்புகிறேன்.

எதுவரை


மலைகள்