வெள்ளி, மே 04, 2012

விசிலடித்துக் கொண்டாடுவதை எதிர்க்கிறேன்


றியாஸ் குரானா

இன்றைய வெகுசன கலாச்சாரமும், அரசியலும் உருவாக்கியிருக்கும் பாதிப்புக்கள் மிக ஆழமானவை. மிக மோசமானவை என நாம் சொல்லும்போது, அவர்கள் அதை மீறக்கூடாத புனிதமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். சிந்தனையைத் தொந்தரவு செய்யாத, எந்தவகையிலும் அதன் இருப்பை அசைத்துப் பார்க்காத இலக்கியப் பிரதிகளை ஏற்றுக்கொள்வதும், அதைக் கொண்டாடுவதுமே வெகுசன நிலவரத்தின் செயற்பாடு. எளிமையான அல்லது மிகப் பழக்கப்பட்டுப்போன ஒரு இலக்கியப் பிரதி என்பது நமது இறுகிப்போன சிந்தனையை சமன் குலைக்காமல் பாதுகாக்கும் கலாச்சாரச் செயல் அது. ஏற்கனவே கலாச்சாரத்தில் படிந்திருக்கும் அறிதலை சரிபார்த்து, அதற்கு அமைவாக நடந்துகொள்வதற்கு இலக்கியத்தின் மூலம் கட்டளையிடும் ஒரு கலாச்சார நடவடிக்கை இது. வெகுசனக் கலாச்சாரக் காவலர்களாக உருப்பெற்றிருக்கும் இலக்கிய ஆசாமிகளால் இது மிகக் கவனமாக காப்பாற்றப்பட்ட படியே இருக்கிறது.

கலாச்சாரத்தை, சிந்தனையை, அறிதலை தொந்தரவு செய்யும் பிரதிகளை உருவாக்கவும், அதனடியாக இலக்கிய வெளியில் பங்காற்றவும் அசாதாரணத் துணிச்சல் வேண்டும்.
காலச்சாரத்தை, அதன் அறிதல் வெளியை சரிபார்த்துக் காப்பாற்றுவதற்கு ஏதுவான எழுத்துக்களும் இலக்கியமாகவே கருதப்படுகிறது.(நானும் மறுக்கவில்லை) அதுபோல, அதை மீறும் எழுத்துக்களும் இலக்கியமாகவே கருதப்படுகிறது.(அவர்கள் இதை ஏற்பார்களா?)

இப்படியான பன்மைத் தன்மை கொண்ட சமூக வெளியில் தட்டையாக 'அனைத்தும் ஓரிடத்தில்' என்பதை நான் ஏற்க்கவில்லை. பன்மைத் தன்மை புரிந்து கொள்ளப்பட வேண்டும். மற்றதாக இருப்பதற்கான நியாயங்கள் ஏற்கப்படவும், புரிந்துகொள்ளப்படவும் வேண்டும். இதில் வன்முறையின் பங்கு என்ன என்பது விபரிக்கப்பட வேண்டும்.வெறுமனே மௌமான எல்லாம் ஓரிடத்தில் என செயல்பட முடியாது. அதை பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது. ஆக, அனைத்தும் ஓரிடத்தில் மையப்படுத்தப்படுவதற்கு மாற்றாக, வேறாக இருப்பதற்கான அதன் பெறுமானத்தை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அல்லது அதை முயற்சிப்பதற்கான ஒரு இடமாக அதை மாற்ற வேண்டும். இப்படி பன்மையான நிலவரத்தின் அனைத்து முனைகளிலுமுள்ளவர்களும் இதை ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே அந்த இடம் முக்கியமானதாக மாறக்கூடிய வாய்ப்பும் பெறுமானமும் சாத்தியமாகும். இந்த அடிப்படையை எந்த முனையாவது மறுக்கும் பட்சத்தில், ஒரு மோசமான படிநிலையே அங்கு உருவாகும்.

கவிப்பேரரசாக ஒருவரும், கைதட்டும் நிலையிலுள்ள ஒரு கவிஞராக ஒருவரும் இருக்கும்படி அந்தச் சூழல் பேணிப் பாதுகாக்கப்படக் கூடாது. பழக்கப்பட்டுப்போன கலாச்சாரத்தை, அறிதலை, சிந்தனையை பரப்பும் இலக்கியத்திற்கு (ஒரு முனைக்கு) மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படக் கூடாது. அது மாத்திரமன்றி, இதையே கோலாக வைத்து இலக்கியத்தை அளக்கவும் தரப்படுத்தவும் கூடாது. கலாச்சாரத்தை, அறிதலை, சிந்தனையை தொந்தரவு செய்யும் இலக்கியச் செயல் சிறு பான்மையானதாக இருக்கிறது. குறைவான பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது என்பதற்காக, அதை தனது இலக்கியச் செயலாக கொண்டு இயங்குபவர்களை – கைதட்டுபவர்களாக மாற்றிவிடக் கூடாது.

இலக்கியத்தை பண்டமாக கருதி, அதிகளவான பாவனையாளர்களைக் கொண்டிருக்கும் போக்கும், அதற்குரியவர்களுமே அரசாட்சிக்குரிய மன்னர்கள் என்றெல்லாம் கேணத்தனமாக செயல்படுவதையே எதிர்க்கிறேன். அதற்கு மாறாக, இலக்கியச் சிறுபான்மையினராக செயற்படுபவர்கள், சந்தர்ப்பம் கிடைக்கிறதே என்பதற்காக போய் நின்று பல்லிழிப்பதையும், அங்கு அப்பாவியாக போய் நின்று விசிலடித்து கொண்டாடுவதையும் எதிர்க்கிறேன். இந்த இலக்கியச் சிறுபான்மைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அதன் முன்னோடிகள் என கருதப்படுபவர்கள், மற்றமையாக செயற்படும் இலக்கிய உரிமை தொடர்பில் எதிர்வினைகளைச் செய்ய வேண்டும்.
வேறாக இருக்கும் உரிமையை மதிக்கின்ற, அதை ஏற்க்கின்ற ஒரு இடத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அது எப்படியான நிகழ்வாக இருப்பினும் கூட. இல்லாவிட்டால் 'ஒன்று கழிந்தது பீ நாத்தம்' என தூக்கி எறிந்துவிட்டு நாங்கள் இயங்கிக் கொண்டே இருப்போம்.