ஞாயிறு, மே 06, 2012

சட்டிக் கறுப்பன்


பைசால்

மின்சாரம் தடைப்பட்டிருந்த இரவு நேரம்
அவன் இருட்டைக் கடந்து வந்துகொண்டிருந்தான்
அவன் கடந்த இருட்டு
தொலைவில் தனியாக நிற்கிறது
நான் ஓடிச் சென்று
இருட்டில் நடப்பவனை சந்திக்கின்றேன்
அவன் அதிக நேரமாக வெளிச்சம் பற்றியே பேசிக்கொண்டிருந்தான்
நான் இருட்டு பற்றியே யோசித்தேன்
எனது யோசனை முழவதும் இருட்டாக இருந்தது
அதில் குறுக்கறுக்கும் மனிதர்களும் கறுப்பர்களாகவே தெரிந்தார்கள்

அவன் பேச்சு
காது கொடுக்கிறேன்

வெளிச்சத்தின் மீது ஏறி நடக்க முடியவில்லை
கால்கள் நடுங்குகின்றன
இந்தச் சிறிய பாலத்தை
இருட்டில் கட்டியிருக்கலாம்
பெரிதாக வந்திருக்கும் என்றான்
மேலும்
இருட்டின் தலையில் வெளிச்சத்தால் அடித்து கொல்வதாகவும்
எம் மீது பழியும் சுமத்தினான்

என் பேச்சு

ஏன் நீ ஆடையின்றி வந்திருக்கின்றாய்
உன்னில் வழிந்தோடும் இருட்டினால்
என் கண்களை மறைக்க முடியவில்லையே

'பாம்புக் கண்ணன்' என்று
சிரித்துக் கொண்டு
இருட்டில் நுழைந்து நடக்கிறான்
'சட்டிக் கறுப்பன்'என்றேன் நான்
அவனுக்கு கேட்டிருக்குமோ தெரியாது

என் பேச்சு

இருட்டில் இருக்கும்போது கண்கள் நன்றாகத் தெரிந்தால்
சட்டிக் கறுப்பனோடு இன்னும் பேசலாம்

சட்டிக் கறுப்பனை மீண்டும் ஒரு நாள் சந்திக்கிறேன்