வியாழன், அக்டோபர் 11, 2012

கருணாகரனின் கவிதைகள்


மலைச்சித்திரம்

கருணாகரன் 

1 கனவு

சரிந்திறங்கும் மலை
எங்கோ முடிகிறதா நிலத்தில்
இல்லை, நிலமாகவே மாறிவிரிகிறதா 
மணற்பெருக்காய்?

மணற் பெருக்கெலாம் கூடி
இறுகிப்
பாறையாகிப் பெருத்துச்
சரிந்து மேலெழுகிறதா
வான் நோக்கிச் சிறகோடு பெருஞ்சிகரம்,

ஆகாயத்தைத் தொட்டுவிடும் 
கனவோடும் தவிப்போடும்.


00

2 பேறு

மண் துகள் ஒவ்வொன்றும்
மலையின் சிதைவன்றி வேறென்ன?

மணற் பெருக்கில் நடக்குந் தோறும்
மலையைப் பிரிந்த துகள் ஒவ்வொன்றும்
தம் சிதைவு சொல்லிப் புலம்பின
ஒரு நாள்.

பிறகொருநாள் கேட்டேன்
“ மணலான பின்னே
பயணமும் திசையறிதலும்
நிகழ்ந்தன நிகழ்ந்தன’’
என்றன ஒவ்வொரு துகளும்

“ மலையின் உறைநிலை
தமக்கில்லை’’ என்றன ஒவ்வொரு மணற் துகளும்.

ஆனாலும்
வானவெளியில் விகாசித்திருக்கும்
சிகரம்போல் வருமோ
ஆயிரமாயிரம் கோடி துகளுக்கும் பேறு?


00

3 எப்பொருள் இணைவு?

அடிவாரத்தில் 
மலைக்கும் நிலத்துக்குமிடையில் எங்கேயுண்டு வெளி
எங்கேயுண்டு பிணைப்பு?

நிலமும் மலையும்
பொருந்திக் கலந்த அவ்விடத்தில்
எப்பொருள் இணைத்துளது
மலையையும் நிலத்தையும்?


00

4 மலைவெளி


பூமியிலிருந்து வான் நோக்கி
எழும் மலை
முடிவுறாத காலம் முழுதும் 
காத்திருக்கிறது வானத்தைத் 
தொட்டுவிடும் கனவுடன்

மேகத்திரை விலக்கி விலக்கி
ஆகாயத்தைத் தொடத்துடிக்கும்
அதன் தாகத்தைப் பெருவெளி
கொண்டாடுகிறது எப்போதும்

வானவெளியில் மிதக்கின்றன
மலையின் சிறகுகள்

வெளியில் புதைகிறது மலை
மலையைக் கொண்டேகத் துடிக்கிறது வெளி

மலையும் வெளியும் கூடிய 
சங்கமத்தை காற்றள்ளிச் செல்கிறது எங்கும்.


00

5 நூறாயிரம் கோடி மழை குளித்த மலை


மலையைக் குளிப்பாட்டும் மழையின் நடனத்தில்
நெகிழ்ந்தது மலை
பேரிசையோடு நிகழ்ந்த ஆனந்த நடனத்தில்
தன்னை நெகிழ்ந்து நெகிழ்ந்தே கொடுத்த
மலை
பெருக்கெடுத்தது பேராறாய் அன்பூறி

மலையாறு
ஆனந்தக்களிப்போடு பொங்கிப் பெருகியது
பாறைகளும் நடனமாடின 
மழையோடு கலந்து.

பேரிசைப் பெருவெள்ளம்
மழை நாளின் மலையெங்கும் நிகழ்ந்த
மறுநாள்
ஒளியழைத்த பகலில்
களைத்து ஆயாசமாய்க் கிடந்தது
மலை

மழைக்கு முன்னிருந்த நிலை
இல்லை இந் நிலை
இது இன்னொரு போது 
மாறும் வெறொரு நிலையாய்
பிறகொரு நிலை

ஒன்றை மாற்றிக் குலைத்து 
இன்னொன்றாக்கி
பிறிதொன்றாக்கி
இவ்விதம் மாறிமாறியே 
பெருகும் நிலை மாற்றம்.

காலந்தோறும் வெள்ளம் 
வெள்ளந் தோறும் நிலை மாற்றம்

இப்போதிருக்கும் மலையின் தோற்றம்
முன்புமில்லை
பின்னுமில்லை.

நான் பார்த்த மலையும்
முன்னிருந்த ஒரு தருணமே


00

பயணம்


என் நிழல் எங்கே கொண்டு செல்லும் 
என்னை?

இதுகாறும் நான் அழைத்துச் சென்ற நிழல்
அன்றி
என்கூடவே துணைவந்த நிழல்
ஒரு பொழுதேனும் என்னை அழைத்துச் செல்லுமா
எங்கும்?

இல்லை, என் நிழலே
அழைத்துச் செல்கின்றதா எப்போதும் என்னை?

நிழலோடு என்பயணமா
இல்லை
நிழலழைக்கும் வழியில் என் பயணமா?


00

மலைக்குருவி


வெளியில் 
ஆகாயம் தொடும் பெருந்தாகத்தோடு
நிமிர்ந்த மலையில்
நிற்கும் தோறும்
வெளியே கனலும் மூச்சொலிப் பெருக்கு 

உள்ளே, கருணை பொங்கித் ததும்பும்
ஊற்றொலிச் சங்கீதம்.

தணலும் தண்மையும்
மலையின் அடிவயிற்றுப் பேரருவிகள்.
சுடும் பாறையின் அருகே
பெருக்கெடுத்தோடும் நதி

நதி செல்லும் வழிவிட்டு 
வெயில் குடித்துக் காய்ந்திருக்கும்
பெரும்பாறைக் கூட்டம்
ஒரு போதும் வருந்தியதில்லை
இத்தனை பெருக்கெடுத்தோடும் நதி
தன்மடியிருக்கும் போதும்
தாம் வெயில் காய்வதையெண்ணி

காற்றாலும் வெளியாலும் ‚
தன்னை நிரப்பி வைத்திருக்கும் பள்ளத்தாக்கு
வான்நோக்கி சிகரத்தை உயர்த்திவிட்டுத்
தான் செல்கிறது
பூமியின் சமதரை நோக்கி

கூடவே தன்னோ டழைத்துப் போகிறது
நதியையும்.

பள்ளத்தாக்கின் மறுபாதி சிகரம்
சிகரத்தின் மறுபாதி பள்ளத்தாக்கு

சிகரத்துக்கும் பள்ளத்தாக்குக்கும்
இடையில் எங்கிருக்கிறது மலை?


00