வெள்ளி, அக்டோபர் 12, 2012

வேல் கண்ணன் கவிதைகள்

1. அறுவடை காலம்---------------------------------

நீ
தவறாமல் வந்துவிடும் 
அறுவடை காலமிது

உன்னில்
மிச்சமிருக்கும் பாலை சூறாவளியையும்
ஒட்டியிருக்கும் மலையருவியையும்
பனிநில இரவுக்காவலனின் பாடலையையும்
நிரம்ப தருவாய்

உன்
உள்ளங்கையில் நடனமிடும்
துளி பாதரசம் ஆழ்கடல் சிப்பிகளின்
வழவழப்பிலானது
(கைகள் கோர்க்கையில் பரிமாறிக்கொள்ளும்)

மலையுச்சியில் நின்று
ஒராயிரம் முறை நம் பெயர் சொல்லுகிறாய்
ஒராயிரம் ஆணும் பெண்ணும் கலவிக்கொள்கிறார்கள்
அதில் சரிபாதி நானாகவும் நீயாகவும்.

வழமையாக
அறுவடை காலம் முடிந்ததும்
விடை பெறுவாய் 

இந்த பருவம் மட்டும் தங்கிச்செல் 
இனிவரும் பொழுதொன்றில் 
நான் உதிரப்போகின்றேன் 

என்னை சேகரித்து 
நிலமெங்கும் தூவி விடு
இனியாகும் அறுவடை காலங்களிலெல்லாம்
உன்னில் நானிருப்பேன்

----------------------------------------------------------------------------------


2. யுகம்---------------------

நமக்கிடையில் எப்போதும் இருக்கும் 
பெரும் மலையொன்று 
இந்த கணத்தில் மாறிப்போனது 
மவுனமாக 
கானல் நதியொன்று 
இந்த கணத்தில் மாறிப்போனது 
பனி மழையாக
கொடிய நாகமொன்று 
இந்த கணத்தில் மாறிப்போனது 
ஆலம் விழுதாக 
அடிவயிற்றில் பிசைந்த வலியொன்று
........விடு .......... பட்டு 
செல்லும் இந்த கணத்தில் 
வியர்த்து நனையும் தேகத்துடன் 
கிடப்போம் அப்படியே.
____________________________________