புதன், அக்டோபர் 17, 2012

கவிதைகள் போல் சில

1.
இரண்டு பெண்களாக சுருங்கியிருந்த
தெருவில் நுழைகிறேன்
தெருவின் இரு மருங்கும்
கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தது
நான் பெருகத்தொடங்கினேன்.
கண்ணாடிகளுக்கு நடுவில் நின்றபோதும்
அவர்கள் இருவராகவே இருந்தனர்
அவசரமாக
கண்ணாடியிலிருந்கும் என்னை
துடைத்தகற்றிக் கொண்டிருந்தனர்
நிறங்கள் அழிந்து
கறுப்பு வெள்ளையாக நான் தோன்றினேன்.
அதுதான் அவர்களின் இலக்கு
நடக்க நடக்க தெரு நீண்டது





2.


காலை உணவிற்காக
மரத்தை நோக்கி
சில மேகங்கள் இறங்கி வருகின்றன

மரம் குளமொன்றின்
நடுவே நிற்கிறது

தண்ணீர் கலவரப்படாதிருக்க
முகத்தை மறைத்திருந்த மேகங்கள்
சாப்பிடத் தொடங்கின

மேகங்களிடமிருந்து தப்பித்து
குளத்தினுள் பாய்ந்தது ஒரு துளி

இவ்வாறுதான்
இன்னும் சிறுது நேரத்தில்
எங்காவது மழை பொழியலாம்

விரும்பியவர்கள்
குடையுடன் செல்க.





3.


ஒவ்வொரு அடியையும்
ரகசியமாக எடுத்து வைத்து
பக்கங்களின் மீது நடக்கிறேன்
மீண்டும்,
தண்ணீருக்குள் ஒரு கல் விழுகிறது
என்னைச் சலனப் படுத்துவதற்கான
மேற்கோள் அது என்றறிகிறேன்
அங்கிருந்து ஒதுங்க வேண்டும்
கட்டாயம் பின் வாங்கியாக வேண்டும்
அடுத்த வார்த்தை கூறப்படுவதற்கு முன்....
அப்படி நடக்கவில்லை
அந்தப் புத்தகத்திடம் தோற்றேன்
வாசிக்க முடியவில்லை.





4.


தட்டையாகத்தான் எழுதினேன்
எங்கிருந்தோ நீர்த்துளிகள்
வார்தைகளில் விழத்தொடங்கியது
நனைந்து விடக்கூடிய ஏதும்
உள்ளே இல்லைதான்
ஆனால், நிரம்பும் தண்ணீரை
வாக்கியத்திலிருந்து வெளியேற்றுவது
பற்றி அறிந்திருக்க விரும்புகிறேன்
மூழ்கும் ஆபத்திலிருந்து தப்பிக்க
அது நிச்சயம் உதவும்
சொற்களுக்கிடையில் வடிச்சல் அமைத்தேன்
வக்கடையைக் கட்டி தடுத்தேன்
பின் இதற்காகவேஇ
ஒவ்வொரு நாளும் போக வேண்டிவந்தது
இப்படித்தான் ஒரு நாள்
வீடு திரும்ப முடியாமல்
அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று
பின் உல்லாசப் பயணிகள்
அங்கு வரத்தொடங்கினர்
அவர்களுக்கான எடுபிடியாக மாறியிருந்தேன்.
கடைசியில் அதைக் கைவிட்டு
வரும்படியாய் போய்விட்டது
அன்றிலிருந்து
என்னால் தட்டையாக எழுத முடிவதில்லை
தட்டையாக எழுத உதவிய,
சூனியக்காரனை மனதிலிருந்து
துரத்திவிட்டேன்.

5.

காற்றுக்கு பின்னால்
ஒழித்துக் கொண்டேன்
அவள் பார்வையிலிருந்து மறைவதற்கு
வேறொன்றும் அங்கிருக்கவில்லை
அவள் என்னைக் காணவில்லை
காற்று கிழக்குப் பக்கம்
ஓடிக்கொண்டிருக்கிறது
அவளை நெருக்கத்தில் பார்க்கிறேன்
இதை நம்பவைக்க
என்னிடம் சாட்சி ஏதுமில்லை
நான் ஒழிக்காவிட்டாலும்
அவள் என்னைப் பாரப்பதில்லை என்பதை
தெரிந்தவர்கள்
இதை வாசிக்கும்போது மறந்துவிடுங்கள்.

6.
வரும்போது போகும் போதெல்லாம்
மேகத்துக்கு அருகில்
தவித்துக் கொண்டிருக்கிறது ஒரு மழைத்துளி
மேகத்திற்குள் நுழைய
என்னால் உதவ முடியாது
உலராமல்
எப்போதும் மேகத்தினருகில்
இருக்கும்படியே செய்ய முடியும்.
அந்தக் கவிதையை
திருத்தும் எண்ணம் தற்போதில்லை.

7.

கறுப்புக் குவளைக்குள்
நிலவிலிருந்து
பால் ஒழுகியபடி இருந்தது
அதை அள்ளி தனது முகத்தைக்
கழுவிக்கொண்டாள்
முத்தமிட நெருங்கினான்
விருப்பமிருந்தும் மறுத்தாள்
அருகிலிருந்த மரத்தில்
சென்று முத்தம் அமர்ந்து கொண்டது.
கதைசொல்லி
நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பார் என
காரணத்தை சொன்னாள்
இரண்டு வாரங்கள் கடந்தன
ஆயிரத்து இருபது பக்கங்கள் புரட்டப்பட்டன
அனைத்து வாய்ப்புகளோடும்
அருகருகே இருந்தபோதும்
முத்தமிடவில்லை.
பல ஆண்டுகளுக்குப் பின்
நேற்றும் நண்பி ஒருத்தி
இன்னும் முத்தமிடவில்லை
என சலித்துக்கொண்டாள்.

8.
நாள் ஒன்றுக்குள் தனியாக மாட்டிக் கொண்டேன்.
அது என்னுடைய நாள் என்பதை
கடைசியாக அறியும் வரை,
பூனைகள் என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தன
ஒரு நகரத்தில் இது நடந்தது.
அந்த நாளுக்கு வெளியே தப்பிச் செல்ல
நீண்ட நேரம் தூங்கினேன்
இடையில் ஒருதரம் கண் விழித்துப் பார்க்கும்போது
பூனைகள் உறங்கியிருக்கவில்லை
கவிதையை அவர் திருப்பி அனுப்பியிருப்பதாகச் சொன்னார்,
நாள் முடிவடைகிற தருணமாக அப்போது இருந்தது.
கவிதையில் மிகப் பிந்தி வந்து சேர்ந்துகொண்ட
பூனைகள் மாத்திரமே என்னிடம் திரும்பியிருந்தன.





9.


இன்னும் மணி ஒலிக்கிறது
யாரோ அழைக்கிறார்
காலடிச் சத்தங்கள்
வீடெங்கும் உலவித்திரிகின்றன
யாரென அவசரமாய் பார்க்க வேண்டும்
தூக்கத்திற்கு வெளியே
நடக்கும் இந்தச் சம்பவத்தை
கனவைத் திறந்து
எட்டிப் பார்க்க முடியவில்லை





10.


இந்த தாள்களில்
எதுவித சொற்களும் இல்லை
ஆனால்,யாராவது பார்க்கும்போது
கவிதை தென்பட தவறுவதில்லை
இதற்கு நான் செய்தது ஒன்றுதான்,
கவிதை இருப்பதாக
தாள்களை நடிக்கப் பழக்கியதுதான்
காற்றிடமிருந்து
அதைக் கற்றுக்கொண்டேன்.
என் காதலியின் குரலோசையை
ஒருபோதும்
காற்று நினைவில் வைத்திருப்பதில்லை
இருந்தாலும் எனக்கு அவர் குரல் கேட்க்கும்
அந்த வித்தையைத்தான்
தாள்களுக்கும் பழக்கினேன்.
இந்த வெற்றுத் தாள்களை ரசிப்பதற்கு
காற்றில் ஓழிந்திருக்கும்
பழைய சப்தமொன்றை கேட்டிருக்க வேண்டும்.





11.


திரும்பிப் பார்த்து
எவ்வளவுதான் சரி செய்தாலும்
அகர வரிசைப்ப படி
காலடிகளை வைத்து
நடக்க முடியவில்லை
இந்தப் பயணத்தில்
நீண்ட தூரத்தை கடந்துவிட்டேன்
இருந்த இடத்தில் இருந்தபடி.





12.


மலைகள் புலம்புகின்றன
அதை சாப்பிட முடியாதென்று,
ஏறுபவர்கள் சாப்பிட்டால்
அது மேகத்தையாக இருக்கலாம்.
மற்றொரு விசயம்
மழை தனது சிறிய கண்களைத் திறந்தால்,
பொழியாது.
எங்கெங்கு விழுகிறோம் என்ற
அச்சம் அதை தடுத்துவிடும்.





13.


வரலாறு குடையைப்போல விரிகிறது
மழைத்துளிகளில் இருந்து
அது யாரையும் பாதுகாப்பதில்லை
ரகசியமாகத் தேடப்படும் புகைப்படமாக
நாம் கரைந்துகொண்டே இருக்கிறோம்





14.


முன்பைவிட மகிழ்ச்சியான கடல்
தொலைவில் அதே பயங்கரம்
வானத்தில் பறக்கலாம் என்றாள்
இரண்டு கோணத்தில் படம்பிடிக்கும்
கமெராக்களுக்கு முன் நடிப்பதைப்போல
பாவனை செய்கிறேன்
ஆனால்,இது நீடிக்காது
பறக்கவும் நீந்தவும் தெரியாத எனக்கு

15.
அவர்களுக்கிடையில்
ஒரு நட்சத்திரம்
சிக்கித் தவிக்கிறது
அது வசிக்க
அங்கிருந்து தப்பிக்க வேண்டும்
தப்பிப்பதென்றால்,
அவர்களுடைய காதல்
முறிவடைய வேண்டும்
இல்லை எனில்
நட்சத்திரத்தை காப்பாற்ற முடியாதென்றான்
ஒரு கவிஞன்.
எனக்குத் தெரியும்
காதலர்கள் சந்திக்கும்போது
அவர்களுக்கிடையில் நட்சத்திரம்
தானாக வந்து மாட்டிக்கொள்கிறது
காதலர்களுக்கு அது தெரிவதில்லை.



16.


ஒரு துளிக் கண்ணீரும் இல்லாமல்
கண்ணாடித் தோட்டத்தில்
நொறுங்கி விழுந்தது ஒரு கதை
அது ஒரு பெண்ணின் புலம்பல்
அவளது அறையில்
திறக்க முடியாத ஜன்னலை
புதிது புதிதாக காணும்போது,
கண்ணாடித் தோட்டத்தில்
கதைகள் செழித்து வளருகின்றன
அவளே இப்படி எழுதச் சொன்னாள்
நம்புங்கள்.

17.
என்னுடைய இரவுகளில்
மகத்தான காகமொன்று அலைகிறது
நள்ளிரவில் கரையும்
வைகறை என நினைத்து
எழுந்துவிடுவேன்
தெரிந்தும்,மீண்டும் செய்வேன்.

18.
எனக்காக
ஒரு காட்டை மந்திரித்து வைக்க
நினைத்தேன்
அதற்காக நீண்டகாலமாக உழைத்தேன்
காட்டுக்குச் செல்லும் போது
பனிக்காலமாக இருந்தால்
அதைக் காண்பேன்.
தன்னந்தனியே யாருக்காகவோ
பெரும் ஏக்கத்துடன்
ஒரு முத்தம் காத்திருக்கும்

19.

கிழிந்த பெருங்கடலின் நடுவே
நீந்திச் செல்வதற்கு
அதிக நேரம் எடுக்கிறது
அந்த பிளாஸடிக் மீன்களுக்கு
அலைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன
தவறுதலாக,
எனது மகன் திறந்த
புத்தகத்தினுள்தான் இவை நடந்தன.

20.

அந்த நிழல் திறக்கப்பட்டது
என் அறையில்
அல்லது கனவில்
அப்போது ஓரு 
வலதுசாரிக் கடவுள்
என்னை விரும்பத் தொடங்கினார்

21.

உடைத்தேன்
கவிதையின் வரிகளை உடைப்பதைப்போன்று
வரிசைப்படி அடுக்கினேன்
கவிதைக்குள்ளிருந்த ஜன்னலை
வீதியின் முன் அகலத் திறந்தேன்
இந்தக் கவிதையின் பொருள்
தோல்வியாகும்
கதவொன்று தானாகத் திறந்து
கதைகளை சொல்லத் தொடங்கியது
அவை ஜன்னல் வழியாக
பார்த்தவைகள் அல்ல