செவ்வாய், அக்டோபர் 23, 2012

கப்பல் கவுண்டது



றியாஸ் குரானா


மிகவும் கடைசி நேரத்தில் ஆபத்திலிருந்து கப்பல் ஒன்றைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்திருந்தேன்.

அதற்கு மழை பெய்ய வேண்டும்
நீர் ஆறுபோல வழிந்தோட வேண்டும்
ஏதாவதொரு குழந்தை கப்பல்விட வேண்டும்
அதற்கு முன் மழை நின்றிருந்தால் சாலச் சிறந்தது
மிதந்து செல்லும் கப்பல்
தெருமுனையில் புதைகுழியில் விழுவதற்குமுன்
பிடித்துச் தரச்சொல்லி குழந்தை அழவேண்டும்
இது ஒரு நாள் நடந்தது.
நீரில் மிதந்து சென்ற கப்பல்
சுழியில் சிக்கியதைப்போல பலமுறை சுழன்று
தட்டித் தடுமாறி புல்லில் சிக்கி நின்றது
எண்ணம் பலிக்காதோ என்ற அவசத்தில்
கப்பலை மனதுக்குள் விரட்டினேன்
நகரத் தொடங்கியது.
தயார் நிலையில் நின்ற நான்
கப்பலின் அருகில் ஓடிச் சென்றபின்னும் குழந்தை அழவில்லை.
புதை குழியில் விழுவதை பரிதாபத்தோடு பார்த்துவிட்டு
திரும்பினேன்.
மற்றுமொரு கப்பலோடு நின்றது குழந்தை.
இதனால் உங்களுக்கு சொல்லுவது யாதெனில்,
எப்பாடுபட்டாவது கப்பலொன்றை நான் காப்பாற்றுவேன்
என இதை வாசிப்பவர்கள் முன்னிலையில் உறுதியளிக்கிறேன்.