வெள்ளி, அக்டோபர் 26, 2012

அழகிய வெற்றிடம்
றியாஸ் குரானா


நேரத்தை என்னால் உடைக்க முடியவில்லை.
துண்டு துண்டாக உடைத்து
வேறொரு ஒழுங்கில்
அடுக்கிப் பார்க்க எண்ணமுள்ளது.
காலங்களைக் குழப்புவதினூடாக
எதையும் சாதிக்க விரும்பவில்லை
நேரத்தின் பழைய பகுதியில்
இருந்த சிலரை சந்திக்க வேண்டும் அவ்வளவே.
சந்திக்கும்போது,
எந்தக் கன்னத்தைக் காட்டினாலும் அறைய வேண்டும்.
செருப்பை கொண்டுபோய்
அது இல்லாத காலத்தில் நின்று
அடிக்க வேண்டும்
கடைசியில் ஆதாமாக மாறவேண்டும்
வேறெப்படியாவது ஏவாளை உருவாக்கு
எனது விலா எலும்பை தரமாட்டேன் என்று சொல்ல வேண்டும்.
என்னைக் காதலிக்க மாட்டேனென்று,
தைரியமாக தனது எதிர்பை அவள் பதிய வேண்டும்
அந்தச் சொல்லிலிருந்து
மொழிகள் பெருகப் பெருக பாத்திருக்கும் நான்
இன்றைய தினத்திற்கு குதித்துத் தாவி
எனது மனைவியோடு வாழவேண்டும்.
தற்போது அவளோடு வாழ
இடம் காலியாக உள்ளது