வெள்ளி, நவம்பர் 09, 2012

7

சப்தங்களோடு விளையாடிக்கொண்டிருக்கும்போது, ஒரு ஒலியை எடுத்து காற்றில் மறைவான வெற்றிடமொன்றில் ஒழித்துவைத்தேன்.அது அமைதியடையவில்லை.ஒலித்து என்னைக் காட்டிக்கொடுக்க தொடங்கியது.இந்த ஒலிக்கான அமைதியை எதனிடம் கோருவதென்று தெரியாமல திகைத்து நின்றேன். அதன் வாழ்க்கை வரலாற்றை புரட்டி வாசிக்கத் தொடங்கினேன்.என்னவொரு அதிசயம் என்றால், அந்த ஒலி இன்றுவரை அமைதியாகவே வாழ்ந்திருக்கிறது.ஒருபோதும் சப்தமாக மாறிவிட முடியாமல் தன்னை பாதுகாக்க அது கற்றுத் தேறியிருக்கிறது.ஆமாம்,அதன் பெயர் மௌனம்.மௌனம் எவ்வளவு இரைச்சல்களாலானது என்பதைப் பாருங்கள்.களைத்து வந்து கிளையில் உட்காரும் காகத்தைப்போல, காற்றின் மறைவான வெற்றிடமொன்றில் ஓலமிட்டபடி உட்கார்ந்திருக்கிறது மிகப்பழைய நமது மௌனம்.