வெள்ளி, நவம்பர் 09, 2012

என் பொழுதுபோக்கு


நதியின் ஒரு முனையைப் பிடித்து
ரகசியமான இடமொன்றுக்கு இழுத்துவருகிறேன்.
பள்ளங்களை நோக்கி ஓடிவிடாமல்
துணைப் பாதைகளை
மிக வேகமாக உருவாக்குகிறேன்.
நீந்தி வந்த மீன்கள் 
என்னைக் கண்டு திரும்பிச் செல்லுகின்றன.
நகரின் சனநெரிசலான பகுதியால்
இழுத்துவரும்போது
சனங்கள் திரண்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
நதியின் இரைச்சல் கைதட்டல்களால்
அழிக்கப்பட்டிருந்தது.
இன்று நதியை ஊருக்குள்ளால்
இழுத்து வந்ததற்கு ஒரு காரணம்தான்
நதிக்கரைவரை அவளால் நடக்க முடியாது
ஆனால்,நதிகளை இழுத்துத் திரிவதுதான்
எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.