வெள்ளி, நவம்பர் 09, 2012

ரீமேக் ஸ்டோரி


குரு


பயணம் தொடங்கி ஓரிரு நாட்களில் ஒரு தடங்கல் ஏற்பட்டது
அதற்கு முன்பும் பின்பும் எந்த அசம்பாவிதங்களும் இல்லை.
பயணிகளாக ஒரு ஜென் குருவும் ஒரு சீடரும்
இரண்டாம் நாள் ஒரு ஆறு குறுக்கிட்டது
அங்கே ஒரு அழகிய இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்
மறு கரைக்குச் செல்ல தனக்கு உதவுமாறு
புன்னகையோடு வேண்டிக்கொண்டாள்.
சீடன் அவளைத் தூக்கிச் சென்று ஆற்றைக் கடக்க உதவினான்.
பலமுறை முறைத்துப் பார்த்தும்
அவர்களுக்கேயுரிய சைகைகள் செய்து காட்டியும்
சீடன் அதைப் பொருட்படுத்த வில்லை
பயணம் தொடர்ந்தது.
ஐந்து வருடங்களின் பின் தங்களுக்குரிய இடத்தை அடைந்தனர்.
குரு தனது சிம்மாசனத்தில் அமர்ந்தார்
அமர்ந்ததும் முதலாவதாக அவர் பேசியது,
நீ அப்படிச் செய்திருக்கக் கூடாது என்பதுதான்
சீடனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
நான் என்ன தவறு செய்தேன் குருவே என வினவினான்
மடத்திலிருந்த அனைவரும் அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தனர்.
அவளைத் தூக்கி இருக்கக்கூடாது எனடறார் குரு.
ஆற்றங்கரையிலேயே அவளை இறக்கிவிட்டேன்
நீங்கள் ஏன் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்றான் சீடன்
மடமே சீடன் பின்னால் சென்றது.
குரு இப்போது என்ன செய்து கொண்டிருப்பார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்..?
கொசு அடிச்சி அடிச்சி குந்திக்கிருப்பார்.
பாட்டி சுடும் வடை
எதிர்பாராத பார்வையாளர் ஒருத்தர் இடையில் நுழைந்து
உங்கள் கவிதை வடைபோல இருக்கு என்றார்
ஆம்,பாட்டி வடை சுட
காகம் திருடிகிட்டுப்போய் மரத்தில் நின்று சாப்பிடும்போது
வழியால் வந்த நரி
பாடச் சொல்லி தந்திரம்போட்டு
பறித்துப்போன கதையில் வரும் வடைதான்
சுட்ட பாட்டிக்கும் பிரயோசனப்படல
திருடிப்போன காகமும் சாப்பிடல
நீண்ட தூரம் போன பிறகுதான்
பறித்துப்போன நரியாருக்கு ஞாபகம் வந்தது
தான் வடை சாப்பிடுவதில்லை என்று
வடை வடை வடை வடை
தெருவால் விற்றுவருகிறான் ஒருவன்
இரண்டும் வேறு வேறு வடைகள்
வடையைக் கண்டதும் தந்திரம் போடுகிறது நரி
என்னதான் நடந்தாலும் பாட்டி வடை சுடுவதை நிறுத்துவதில்லை.