செவ்வாய், டிசம்பர் 18, 2012

கவிதையை காத்திருக்கும் 13 தருணங்கள்


றியாஸ் குரானா

 1. பறக்கும் தாள்களில் இராணுவ வீரர்கள் சிலர் அமர்ந்திருந்தனர்.சாகசம் செய்வதாக நினைக்கும்போது,தெருக்குழியில் கிடந்த நீரில் விழுந்து கரைந்தனர்.

2. தேனீர் தயாரிக்கும்போது அதற்குள் சில மதுத்துளிகளை புத்திசாலித்தனமாக இட்டான்.

3. அந்தப் பறவையின் குரலை மறைக்க முடியாது.ஆகவே, அது மரம் ஒன்றை எங்கும் சுமந்து திரிகிறது.

4. ஆப்பிள் பூமியில் விழும்போது நியூட்டன் பசியோடு இருக்கவில்லை. இருந்திருந்தால் ஓடிப்போய் அதை எடுத்து சாப்பிட்டிருப்பான்.போதாவிட்டால்,மரத்தை உலுக்கியிருப்பான்.ஏறிப்பறித்திருப்பான். தோட்டக்காரன் இவரைத் திருடனென்று போலிசில் புகார் செய்ய,பின் பிடிபட்டு சிறையில் வாழ்ந்திருப்பான்.

5. இலையின் அழகு துளித்துளியாக காற்றில் வழிந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு நாளும். அது விழுந்தபிறகுதான் மிகவும் அழகாக மாறுகிறது.

6. சமயல் அறைக் கதவில் ஒரு பெண்ணை வரைந்தார்.சமையல் என்றால் பெண்தான் பொருத்தம் என தனது சொற்பொழிவிற்கான குறிப்புகளை எடுத்தார்.வெளியில் புறப்படுவதற்கு முன் சமயலறைக் கதவை திறந்து பார்த்தார்.யாராவது பெண் சமைக்கிறாளா என அறிய தூண்டியதாகச் சொன்னார்.விரைவில் வயது கடந்த நிலையில் தனது முதலாவது திருமணத்திற்காக தயாராகும் பேராசிரியர்.

7. நெல் மணிகளை கோழிகள் தினமும் கொத்தி தின்கின்றன.முதலாளி சரியாக இருப்பதாகவே ஒவ்வொரு நாளும் திருப்திப்படுகிறார்.நெல் மணகளை எண்ணி வைப்பதில்லை என்று கோழிகளுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

8. வீட்டு வேலைக்காரியிடம் தனது முத்தத்தை அனுப்பியிருந்தாள்.நானும் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தேன்.அவளுக்கு கிடைக்காமல் போய்விட்டது.அவளை சந்திக்கும்போது இவைபற்றி நான் விசாரிப்பதே இல்லை.

9. நடைமுறையிலிருந்து கனவுக்கு திரும்பும் வழியில்,கடைசி விண்மீனை தாண்டிப் பாய்ந்தது. அருகிலிருந்த நிலவை கண்ணை மூடி குடிக்கத் தொடங்கியது.அதை யாரும் காணவில்லை என்று பூனையின் நினைப்பு.பகல் நேரங்களில் கொக்குகளாக மாறி உலவுவதையும் நான் கண்டிருக்கிறேன்.ஆண் நிலவு எப்போதும் மறைந்துதான் இருக்கும்போல அதை இதுவரை யாரும் கண்டதாகச் சொன்னதில்லை.

10. சாப்பிடுவதற்கு முன் கடவுளிடம் அவள் என்ன சொல்லி இருப்பாள்?என்னால் அமைதியாக இருக்க முடியாது.அதற்காக உனது பிரதிநிதியாகவும் இருக்க முடியாது.பகிர்ந்து ஆப்பிளைச் சாப்பிட்டாள். இப்படித்தான் பலர் சொல்கிறார்கள்.ஆனால்,சாப்பிடுவதற்கு முன் கடவுளை அவள் சந்திக்கவில்லை.

11. கண்ணாடியில் தெரிந்த மூன்றாவது பறவையும் கொல்லப்பட்டுவிட்டது.தானாக வந்து கண்ணாடியில் உலவிய பறவைதான், கட்டாயமாக கண்களை மூட வேண்டிவந்ததும், மூடித் திறந்தபோது அவர்கள் கொன்றிருந்தார்கள்.

12. ஒவ்வொரு சொல்லாக அறிவுறுத்தலின்படி பின் தொடர்ந்தேன்.மிகக் கவனமாக அழைத்துச் சென்றது துண்டுப்பிரசுரம்.நாளை நமதே என முடிவுற்றது.தலையணையின் கீழ் வைத்துவிட்டு தூங்கி எழுந்து பார்த்தபோதும் நாளை நமதே என்றுதானிருந்தது.இப்படி பலமுறை ஏமாறியிருக்கிறேன்.

13. வீதியில் இரு பெண்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். ஒரு பெண் கறுப்பு ஆடை அணிந்திருந்தாள்.மற்றவர் கறுப்பாக இருந்தார்.ஆடையில்லாமல் மற்றவர் இருந்தார். மூன்றாக இருப்பதைப் பார்த்து,நான்கு பெண்கள் நடந்து கொண்டிருந்தனர்.தூங்குவதற்கும் அதிலிருந்து எழும்புவதற்குமான பிரதிநிதிகளை இரு பெண்களும் வைத்திருந்ததால்தான் இவ்வளவு சனக்கூட்டமாக மாறிவிட்டது.அங்கிருந்து தப்பி வந்த என்னுடன் யாரும் வரவில்லை.