புதன், டிசம்பர் 19, 2012

பேயன் பார்த்த பிலாப் பழம்

றியாஸ் குரானா

அண்ணார்ந்து பார்த்தார்
பிலா மரம் காய்த்திருந்தது.
மறு நாள் காலையில்
ஒன்று குறைந்திருந்தது.
யாரோ பறித்திருக்க வேண்டும்
நான் அப்படித்தான் நினைத்தேன்
பிலாப்பழமொன்று சற்று மேலே ஏறி
உட்கார்ந்திருக்கிறது என சொன்னார்
அடுத்து வந்த அனைத்து காலையிலும்
சற்று மேலே ஏறி உட்காருவதற்கு
பிலாப் பழத்திற்கு உதவினேன்.
பன்னிரண்டாவது கலையில்
பெரும் அதிர்ச்சி காத்திருந்தது
மரத்தில் கனிகள் எதுவும் இல்லை
உட்கார்ந்திருந்தவரின் அருகில் சென்று
துக்கம் விசாரிக்கலாம் என நெருங்கினேன்.
அவர் மிக ஆனந்தமாக இருந்தார்.
தான் எதையோ கண்டுபிடித்த மகிழ்வில்
திளைத்திருந்தார்.

பிலாப்பழம்
கொஞ்சம் கொஞ்சமாக மரத்தில்
ஏறும்போதே நான் நினைத்தேன்
எங்கெயோ போய் ஒழிக்கப் போகுதுகள் என்று
இதை என்னிடம் சொன்னார்.
பேயன் பிலாப் பழத்தை பார்த்த கதை
நினைவுக்கு வந்தது சொல்லவில்லை.
அவர் சொன்னார்
பிலாப் பழங்கள் ஒழிந்திருப்பதற்கு
மிக வசதியான இடம் உங்கள் வீடுதான்