வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

றியாஸ் குரானாவின் கற்பனைச் செயல்


கருணாகரன்

மிகுதியை எங்கு வாசிக்கலாம் என்ற எனது கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய உரை.

எதற்காகக் கவிதைகள் எழுதப்படுகின்றன? அவை எப்படி உருவாகின்றன? இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கவிதைகளின் உருவாக்கம் நிகழும்? கவிதைகளை வாசிப்பதும் கொண்டாடுவதும் எத்தனை தலைமுறைகள் வரை தொடரும்? கவிதை ஒரு அத்தியாவசியமான தேவையாக இன்னும் உள்ளதா? தொடர்ந்தும் அது அப்படி இருக்குமா? கவிதை எப்படி உருவானது? எதற்காக உருவாகியது?` கவிதைகளைப் படிக்கும்பொழுது இந்த மாதிரியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன.

ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகளை எழுதி வருகிறேன். அதற்கும் அதிகமான காலம் கவிதைகளுடன் புழங்குகிறேன். என்றாலும் இந்தக் கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்களைக் கண்டதில்லை. இதற்குக் காரணம், ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாக இருப்பதே. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அடிப்படைகளைக் கொண்டிருக்கின்றன. வெவ்வேறு அனுபவங்களையும் ஆச்சரியங்களையும் தருகின்றன. நிச்சயமாக ஒவ்வொன்றுக்குமிடையில் வேறுபாடுகளும் விலகல்களும் உண்டு. சாயல்களையும் தொனிகளையும் வைத்து அவற்றை அரசியற் கவிதைகள், இயற்கை தொடர்பான கவிதைகள், ஆன்மீகக் கவிதைகள், சமூகக் கவிதைகள், சிறுவர் கவிதைகள் எனச் சில வகைப்பாடுகளாக அடையாளங் காண்கிறோம். ஆனால், இது ஒரு சரியான காரணமோ அடிப்படையோ அல்ல. கவிதையின் அடிப்படை என்பது, அனுவமும் சிந்தனையும் கலந்து வெளிப்பட முனையும் கற்பனையிலும் புனைவுத்  தன்மையிலுமே கருக்கொண்டுள்ளது. புனைவென்பது கற்பனை சார்ந்த ஒரு செயல். அல்லது கற்பனையின் ஓர் விளைவு. இலக்கியம், கற்பனையும் புனைவும் இணைந்த ஒரு விளைபொருள். மனித மனமானது கற்பனை, புனைவு என்ற அம்சங்களில் தன்னைச் சதா ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்தளமாகும். இந்த நிகழ்தளத்தில்தான் கவிதையும் இலக்கியமும் ஏனைய படைப்புகளும் உருவாகின்றன. எனவே, மனித இயக்கம் உள்ளவரை கவிதையின் நிகழ்வும் பிற படைப்பாக்கங்களைப் போல இருக்கும் என்று படுகிறது.

மனிதச் செயற்பாடுகளில் கவிதை முக்கியமான ஒன்று. கற்பனை வெளிப்பாடுகளில், புனைவுருவாக்கத்தில் மொழியின் சாத்தியப்பாடுகளில் முக்கியமானது. ஆகவே, மனிதருடைய உணர்வும் அதை வெளிப்படுத்தும் முனைப்பும் கற்பனைத் திறனும் ரசிகவிருப்பும் உள்ளவரையில் கவிதையும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இன்னும் செம்மையாக, இன்னும் புதுமையாக வினோதமாக இந்த வெளிப்பாடு நிகழும். மனித ஆற்றல் அப்படியானது. அதனுடைய விருப்பமும் அப்படியானதே.

மனிதரின் ஆற்றல்களும் வெளிப்பாடுகளும் பல வகைப்பட்டன. கற்பனைத் திறனும் உணர்ந்து கொள்ளும் ஆற்றலுமே மனிதரைப் பிற உயிரிகளிலிருந்து வேறுபடுத்தி, பரிணாமத்தோடும் பரிமாணங்களோடும் முன்னகர்த்தியிருக்கின்றன. இயற்கையாக அமைந்த உலகை தமக்கிசைவாக, தங்களின் கற்பனைக்கமைய, தமது தேவைகளுக்கேற்ப மாற்றியும் சீர்ப்படுத்தியும் இயைந்தும் விலகியும் உருவாக்குவது மனித இயல்பு. அதுவே அதன் சிறப்பும். 

இந்த முனைப்பு தலைமுறைகள் தோறும் மேலும் மேலும் விருத்தியடைகிறது. நேற்றிருந்தவை இன்றில்லை. இன்று புதிதாகப் பலவும் உருவாக்கப்பட்டுள்ளன - உருவாக்கப்படுகின்றன. நாளை இன்னும் பலது உருவாக்கப்படும். மனிதரிடமுள்ள கற்பனைத் திறன் சதா புதிதை உணர்ந்து கொண்டும் உருவாக்கிக்கொண்டுமே இருக்கும். அதற்கு எல்லையில்லை. வேண்டுமானால், கற்பனையின் ஊற்று அடைபடும்போது புதிதின் உருவாக்கம் நின்றுவிடலாம். அப்பொழுது மனித அடையாளமும் வேறாக மாறிவிடலாம். ஆகவே மனித அடையாளத்தைப் பேணும் அடிப்படை என்பது மனிதரிடத்திலுள்ள கற்பனையே. கற்பனையின்றி மனிதரின் எத்தகைய படைப்புகளும் சாத்தியமில்லை. இந்த உலகம் இயற்கையாக அமைந்தவற்றுடன் மட்டும் நின்று விடவில்லை. தெருக்கள், சந்தைகள், மாடி மனைகள், நகரங்கள், தோட்டங்கள், வயல்வெளிகள், படகுகள், துறைகள், வண்டி வாகனங்கள், பொருட்கள், பண்டங்கள், மொழி, இசை, படம், நாடகம், கருவிகள், உடை என மனிதர் படைத்ததே அதிகம். இந்தப் படைப்புகளில் இரண்டு அடிப்படையான அம்சங்கள் கலந்திருக்கின்றன. ஒன்று மனிதரின் கற்பனை. இரண்டாவது, அந்தக் கற்பனையை வடிவமாக்கும் மனிதர்களுடைய உழைப்பு. இவை இரண்டினதும் கூட்டு  விளைவே நாம் காணுகின்ற இன்றைய உலகம். இயற்கையின் படைப்பும் மனிதருடைய படைப்பும் இணைந்தே இந்த உலகம் உருவாகியுள்ளது. இந்த உலகத்தையே நாம் ஆள்கிறோம். இதிலேயே  வாழ்கிறோம்.

மனித முயற்சியினால் பலதையும் உற்பத்தி செய்யலாம், பெருக்கலாம். ஆனால், மனிதரிடமுள்ள கற்பனைத் திறனே புதிதை உருவாக்கும். அதைப்போலக் கவிதையும் புதியதொன்றே. அது கற்பனையின் ஊற்றிலிருந்து பிறந்து, பெருகுவது. இந்தக் கற்பனை பிற கற்பனைகளுக்கான அடிப்படைகளைப்போன்று, மனிதத் தேவைகளையும் மனித ஆற்றலையும் அடிப்படையாகக் கொண்டது. அவற்றிலிருந்து துளிர்ப்பது. இதை றியாஸ் குரானா கற்பனைச் செயல்என்கிறார். றியாஸ் குரானாவின் கவிதைகளும் அவர் வலியுறுத்துவதைப் போல கற்பனைச் செயலின் தூல வடிவமாகவே உள்ளன. ஆனால், வாழ்க்கைக்கும் அனுபவத்திற்கும் இயற்கைக்கும் பௌதீக எல்லைக்கும் அப்பால் சென்று தன்னுடைய கற்பனையை வெற்று வெளியில், தட்டையாக வெற்றொலியாக றியாஸ் கொள்ளவில்லை. அவருக்குக் கவிதை ஒரு பேருலகம், சதா நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரியக்கம். மனதிற் கிளம்பும் களிப்பும் கொண்டாட்டமும் நிறைந்த வினோத விளையாட்டு. மாஜலீலை. பரிசோதனைகளின் களம். அறிவைச் சோதனை பண்ணிப் பார்க்கும் ஒரு முறைமை. மொழியின் சாத்தியப்பாடுகளை மனதின் வடிவத்திற்கும் மனதின் சாத்தியப்பாடுகளை மொழியின் இயங்குநிலைக்கும் மாற்றிப் பயன்படுத்திப் பார்க்கும் முயற்சிமிக்க செயல்பாடு. இது மனித இயல்பிற்குரிய ஒன்றே. ஆதி மனிதர்கள் தங்கள் கற்பனையாலேயே புதிய தொடக்கங்களை உருவாக்கினார்கள். இன்னொரு வகையிற் சொல்வதானால், பிற உயிரிகளிலிருந்து அவர்கள் வேறுபட்டது தங்களிடமிருந்த கற்பனை என்ற அம்சத்தினாலேயே.

மனித வாழ்க்கை என்ற ஒன்று உருவானது கூட மனிதரிடம் உருவாகிய கற்பனையின் விளைவிலிருந்துதான். அவர்களுடைய மனதிற் கிளர்ந்த கற்பனையே அவர்களைப் புனைவுக்குத் தூண்டியது. காலந்தோறும் பல வகையான புனைவுகள் உருவாகின. பிறகு புனைவுகளிற் பல நிஜவடிவங்களாகின. ஆனால், ஆழமாக நோக்கினால் அந்த நிஜத்தின் உள்ளேயும் மையங்கொண்டிருக்கும் மூல வித்து, கற்பனையின் தூண்டுதலிற் பிறந்த புனைவே என்று புரியும்.  இலக்கியம் மட்டுமல்ல, குடியிருக்கும் வீடும், வளவும் வண்டி வாகனமும், நாம் அணிந்திருக்கும் உடைகளும் பிற மனிதப்படைப்புகளும் கூட இந்த வகையினதே.

இன்று நாங்கள் வந்தடைந்திருக்கிற இடம் நம் முன்னோருடைய கற்பனையின் புனைவுகளின் விளைவினால் உருவானது. நாளை நம் சந்ததிகள் சென்றடையப்போகிற இடமும் அப்படித்தான். எங்களிடமுள்ள கற்பனையும் அவற்றை வடிவமாக்கும் முயற்சியுமே அவர்களுடைய இடமாக அமையும்.

றியாஸ் மனித மனதின் கற்பனை புனைவு என்ற இந்த மூல வித்தை தன்னுடைய கவிதைச் செயல்பாடாகக் கொள்கிறார். றியாஸ்க்கு ஆதிமனிதனின் விநோத உலகம் நல்ல பரிச்சயமாக இருக்கிறது. அந்த உலகமே அவருக்குத் தெரிகிறது. ஆதிமனிதரின் புனைவு வெளியையே றியாஸ் தீண்டுகிறார். அதிலேயே அவர் விளையாடுகிறார். அந்த உலகத்திலேயே அவர் பயணிக்கிறார். அதையே அவர் படைத்தளிக்கிறார். மனிதர்கள் கற்பனையை விட்டு விலக முடியாது என்பது அவருடைய வலுவான நம்பிக்கை. அது அவருக்குள் ஒரு பிடிவாதமாகக் கூட இன்று வளர்ந்திருக்கிறது. றியாஸ் கவிதைகளைக் குறித்தும் இலக்கியம் குறித்தும் எழுதி வருவதைக் கவனித்தாலே இதையும் அவரையும் புரிந்து கொள்ள முடியும்.

`ஒருவகை வினோதங்கள் நிரம்பிய, சந்தேகங்களுடன்கூடிய ஊகமாகவே இலக்கியப் பிரதியை பாவிக்க வேண்டும்.புறச்சூழலின் யதார்த்தங்களுக்கு சக்கதியூட்டும் நம்பத்தகுந்த ஆவணங்களாக அல்ல. அப்போதுதான், முழச் சம்மதத்தோடு வாசிப்பதற்கான அனைத்துக் கதவுகளையும் இலக்கியப் பிரதி திறந்து தரும். ஒழிவு மறைவுகளின்றி பிரசன்னமாகும்.
இலக்கியப் பிரதி கற்பனையானது. கற்பனைச் செயல் என்பது, மேலதிகச் சிந்தனை என நினைப்பவன் நான். வினோதங்களும், மாயங்களும் நிரம்பியதுதான் சிந்தனை. அங்கிருந்தே தொடங்குவோம்.`
                                                                           (றியாஸ் குரானா கற்பனை என்பது மேலதிகச் செயல் மலைகள்.கொம்)  
ஆனால், ஈழத்தின் அநேக படைப்பாளிகளும் கவிஞர்களும் அரசியல், சமூக தேவைகளின் நிமித்தமாகவும் எண்ணத்தின்படியுமே இயங்கி வருகின்றனர். இந்தப் போக்கு ஒரு பிரதான வழிமுறையாகவும் அணுகுமுறையாகவும் பலமடைந்துள்ளது. இலக்கிய வாசிப்பாளர்களும் அவர்களுடைய வாசிப்பு முறையும் கூட இதனை ஒட்டியே உள்ளது. ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான இலக்கியப் படைப்புகள் அரசியல் மற்றும் சமூக நிலவரங்களின் விளைவாகவே உருவாகின்றன. இது ஆதி மனதிற்கும் நவீன உலகிற்குமிடையிலான வேறுபாடுகளின் விளைவு. ஆனால் எல்லாவற்றிலும் வாழ்க்கையும் அதனுடைய அனுபவங்களுமே அடியோட்டமாக உள்ளன.

றியாஸ் ஈழத்தின் பொதுவான இலக்கிய வழிமுறை, அணுகுமுறையிலிருந்து விலகிச் செல்கிறார். இலக்கியத்தை அரசியலுக்குள் சிறைப்படுத்திக் கொள்ள மையப்படுத்திக் கொள்ள அவர் விரும்பவில்லை. இதை அவரே சொல்கிறார்- 

`ஈழத்தில் ஒரு துயரம் என்னவென்றால், இலக்கியப் பிரதி என்பது அரசியலை ஏற்றி வாசிப்பதற்கு இடந்தர வேண்டும் என்ற ஒரு பார்வை நிலவுவதுதான். அதுவும் குறித்த ஒரு வகை அரசியல் சார்புடைய வாசிப்பிற்கே வாய்ப்பளிக்க வேண்டும். இந்த எதிர்பார்ப்பை முற்றாக மறுக்கும் பிரதிகளின் நிலை என்ன வென்று நீங்கள் இகுவாக புரிந்து கொள்ள முடியும்.` என்று.

இந்த இடத்தில் கவிதைகளைக் குறித்து பிரமிள் எழுதிய ஒரு விசயம் நம் நினைவில் வருகிறது. “உணவுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விட வைரத்தின் தேவை குறைவாக இருக்கலாம். ஆனால்,
வைரத்தின் மதிப்பு என்றும் குறைந்து விடுவதில்லை“. உண்மைதான். இதை நிராகரிக்க முடியாது. கலையின் வெற்றியே இதுதான். உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படையான பௌதீகத் தேவைகளுக்கு அப்பால்,  அகரீதியான தேவைகளை கலை நிறைவு செய்கிறது. என்பதால்தான் நட்சத்திரங்களின் ஒளிப்பிலும் மலர்களின் வாசனையிலும் அவற்றின் அழகிலும் மழையின் தண்மையிலும் வானவில்லின் வண்ணங்களிலும் மயிலின் தோகையிலும் லயிக்கிறோம். ஆடலும் பாடலும் இசையும் ஓவியமும் சினிமாவும் நமக்குத் தேவையாக உள்ளன. இவற்றில் ஏதோ ஒரு அளவில் கற்பனையும் புனைவும் நிரம்பியுள்ளன.  என்றபடியால் றியாஸின் புனைவுகளும் லயிப்பைத் தருகின்றன.

இதேவேளை றியாஸின் கவிதைகள் பிற ஈழக்கவிதைகளைப் போலன்றி, காலம், இடம் என்பவற்றைக் கடந்து பொதுவெளியில் நிற்கின்றன. பிற ஈழக்கவிதைகள் பொதுவாக காலத்தின் அடையாளம், சூழல் அல்லது நிலைமைகளின் தாக்கம், இடத்தின் தன்மை போன்றவற்றை ஏற்றவையாக உள்ளன. றியாஸ் இதிலிருந்து வேறுபடுகிறார். அவர் கற்பனையையும் புனைவையுமே தன்னுடைய ஆதாரமாகக் கொண்டிருப்பதால் கால, இட நிர்ணயங்களைக் கடந்து பெருவெளியில் சஞ்சரிக்கிறார். றியாஸின் கவிதைகளின் நம் சமகால (போர் மற்றும் போருக்கு முந்திய, பிந்திய கால) அந்தரிப்புகள் எதையும் காண முடியாது. அல்லது நமது நாளாந்த வாழ்வின் நெருக்கடிகளைக் கூட உணர்ந்து கொள்ள முடியாது. இதையெல்லாம் கடந்த உலகத்தையே அவர் தன்னுடையதாக காண்பிக்கிறார். கழிந்து விடாத காலமொன்றை பிரயோகப் படுத்துகிறார் றியாஸ். என்றால் நிரந்தரமான காலத்தையும் உலகத்தையும் காட்சிப் புலத்தையும் காண்பிக்க முனைகிறார் எனலாம். றியாஸின் கவிதைகள் பலதும் அப்படித்தான் உள்ளன.

`என் கனவுகளிலொன்றைக் காணவில்லை
தொலைந்துவிட்ட தென்றும் சொல்லலாம்
கண்டுபிடித்து தருபவர்களுக்கு 
தகுந்த சன்மானம் வழங்கப்படும்
தொலைவதற்கு சற்று முன்
நானும் அவளும் அதற்குள்
முத்தமிட்டுக் கொண்டிருந்தோம்.
மேலதிகத் தகவலொன்று
அந்தக் கனவு சதுரவடிவிலானது.`

- இது மாதிரி இன்னொரு வேடிக்கை. ஆனால் இந்த வேடிக்கை நிரந்தரமானது. கால மாற்றத்திற்குள் சிக்கி விடாதது.

ஒரு ஜன்னலும்
ஒரு கதவும் கொண்ட சுவர்தான்
ஆதிகாலம் தொட்டு இருக்கிறது
சுவருக்கு அந்தப் பக்கம் பார்க்கும் ஆசையில்
ஜன்னலைத் திறந்தேன்
கடலும் அலைகளும் தெரிந்தன
கதவைத் திறந்தேன்
காடும் மலைகளும் தெரிந்தன.
ஒரே திசையில்
அருகருகே இருக்கின்றன
என்பது அனைவருக்கும் தெரியும்.
திறக்கும் எல்லாத் தருணங்களிலும்
அப்படியல்ல.

இவ்வாறு றியாஸின் புனைவுகள் இன்று நம் கவிதைப் புலத்தில் பெருகிக்கொண்டிருக்கின்றன. நமக்கு அவர் ஏராளம் வினோத உலகங்களைச் சிருஷ்டித்துக் காண்பிக்கிறார். இது ஒரு வித்தைதான். ஆனால் செப்படி வித்தையல்ல. புனைவாளனின் கலைமுத்திரையாக அமையும் வித்தை. கலை முத்திரையைப் பதிக்கும் ஒரு கலைஞனின் இடம் நிச்சயமாக றியாஸ் குரானாவுக்கு உண்டு.

நாம் றியாஸின் கவிதைகளை புரிந்துகொள்வதன் மூலமாக றியாஸை விளங்கிக் கொள்ளலாம். அவருடைய மனவுலகத்தை, அவரின் புனைவுத்தளத்தை, அவருடைய சிந்தனையின் விசித்திரத்தை எல்லாம் விளங்கிக் கொள்ள முடியும்.

மாயா ஜாலக்கதைகள், ஐதீகக் கதைகள் போன்றவற்றை உருவாக்கிய ஆதி மனமே றியாஸின் படைப்புத்தளமும் மனமுமாகும். ஆனால், இது நவீனமானது. பழசும் புதுசும் கலந்தது. விநோதங்களிலும் வித்தைகளிலும் லயித்த பித்து மனமாக உள்ளது. எனவே அவர் மொழியின் சாத்தியப்பாடுகளை விடவும் கற்பனையின் மூலம் புனைவு வெளியில் எல்லா எல்லைகளையும் தாண்டிச் செல்கிறார். அல்லது தாண்டிச் செல்வதற்கு முனைகிறார். இது சாதாரண முனைவு அல்ல. வேகம் நிரம்பிய முனைவு. அப்படிச் செல்லும்போது அவருடைய கவிதைகள் விரிகின்ற எல்லைகள் அபாரமானவை. புனைவிற்கு எல்லையில்லை. அதற்கு வரையறைகளும் கிடையாது. ஆகவே, அந்தப் பிரமாண்டமான வெளியில், தன் மூதாதையரின் ஆதி மனிதரின் சுவடுகளில் காலடி வைத்து, மனதை அதற்கிசைவாகப் பழக்கி, அவர்களைப் போலத் தானும் பெரும் புனைவாளனாகிறார் றியாஸ்.

இந்த வகையிலேயே றியாஸின் பல கவிதைகள் எனக்கு வியப்புட்டுகின்றன.

குறைந்த ஒளியை வைத்துக்கொண்டே
வானத்திற்கு வந்தது நிலவு.
பின் தேயவும் வரளவும் பழகியது.
காலப் போக்கில் அணைந்துவிடவும் பழகிக் கொண்டது.
இன்று உள்ள நிலவாக மாற
நீண்டகாலமாக கடுமையாக உழைத்திருக்கிறது
என்று அவர் கூறினார்.

இது றியாஸின் கவிதைகளில் ஒன்று. ஆபிரிக்கக் கதைகளில், கவிதைகளில் இன்றும் புழங்கும் மாஜாவாதத் தன்மைக்கு ஒப்ப இந்தக் கவிதை உள்ளது. விநோதமாக எழுவது. இந்த மரபு தமிழிலும் உண்டு. பிற மொழிகளிலும் பிற சமூகங்களிலும் உள்ளது. எந்தச் சமூகத்திலும் கற்பனையின் செறிவுண்டு. ஆகவே கற்பனை செய்யாத மனமும் இல்லை. சமூகமும் இல்லை.

`இன்னும் 22 பக்கத்தைக் கடந்தால்
அவளைச் சந்தித்து விடுவேன்.
நேரடியாக அவளிருக்கும்
பக்கத்திற்குள் நுழைந்தேன்.
அடைப்புக் குறிகள் நிரம்பி இருந்தன.
அவைகளைத் திறக்க வேண்டாம்
உள்ளே நாய் உறங்குகிறது என்று ஒரு குறிப்பிருக்கிறது.“

-    இது ஒரு கவிதை.

`கண்ணாடியினுள் நான் சிக்கிக் கொண்ட நேரம் பார்த்து
அதை மகன் உடைத்துவிட்டான்.
துண்டுகளிலிருந்து வெளியேறி
என்னை ஒட்டி முழுமையாக்க வெகு நேரமானது.`

-    இது மற்றொன்று.

இப்படி பல கதைகள் கேட்டிருக்கிறேன்.

இரண்டு மீன்கள்
உயிருடன் காற்றில் நீந்திக்கொண்டிருந்தன.
பறவைகளிடமிருந்து தப்பிக்க
மீன்கள் செய்த வித்தை அது என
இன்னும் பறவைகளுக்கு தெரியாது.
துரத்திக்கொண்டே இருக்கின்றன.
எனக்கு தெரிந்து 5 வருடமாகிறது.
மீன்கள் மாட்டுவதில்லை.

-    இது இன்னொன்று.

பெட்டி ஒன்றுக்குள் இருபது நிழல்களை
அடைத்து வைத்திருக்கிறேன்.
தெருக்களில் அலைந்து திரிந்து
கஷ்டப்பட்டு பிடித்தவைகள்.
அதற்குள் எனக்குப் பிடித்த நிழலொன்றும்
இருந்தது.
பின் அது தப்பிச் சென்றுவிட்டது.
கவிதையில் தற்செயலாக நடந்த
விபத்தின் போது அதை இழந்தேன்.
நிழல்களுக்கான உணவை
கொடுக்க மறந்தபோது அந்த விபத்து நடந்தது.
நிழல்கள் என்ன சாப்பிடும்..?

-    இது வேறொன்று.

`தனியாக இருக்க முடியவில்லை என்பதால்,
தன்னை ஒரு பிரதி (copy) எடுத்து எதிரே இருந்த நாற்காலியில் உட்கார வைத்தாள்.
மாலை இனிதே கழிந்தது. பின், வீட்டுக்கு கூட்டிச் சென்றாள்.`

புதிய புனைவிதம் இது. இதை வியக்காமலிருக்க முடியுமா? வியப்பை உணரும் மனம் அதில் லயித்துக் களிக்கும். இந்த வாழ்க்கையை களிப்பில் கொண்டாடவே இயற்கை நம்மை விதித்திருக்கிறது. லயிப்பின்றிய வாழ்க்கையில் எதுவுமிருப்பதில்லை. ஆன்மீகத்திலும் கூட களிப்பும் லயிப்பும் உண்டு. துறவறத்தில் கூடக் களிப்பும் லயிப்பும் கற்பனையும் புனைவும்தான் நிரம்பியுள்ளது. எனவே நிஜயத்தை விடக் கற்பனையும் புனைவுமே இந்த உலகில் அதிகம் எனலாம். என்றபடியாற்தான் இதை மாஜ உலகம் என்றார்களா?

இதை மேலும் உணர வேண்டுமானால் றியாஸின் மேலும் சில கவிதைகளை உதாரணப்படுத்தலாம். 

`எழுத்துப் பிழையை சரி செய்தபோது,
அதே பெயரில் வேறொருவர் அந்தக் கதைக்குள் வந்தார்.
திருத்தம் செய்யும்வரை கதையைக்
காப்பாற்றி வைத்திருந்ததற்காக நன்றி மட்டுமே சொல்ல முடிந்தது.`

-    இது அடுத்தது.

`ஒரு காலத்தில் ஒரு கடலிருந்தது
அதன் காவலுக்கு குரங்கொன்றை வைத்திருந்தேன்
அலைகளோடு விளையாடும் ஆசையில்
சம்மதித்தது.
கடலை இழுத்துக்கொண்டு விரும்பிய இடமெல்லாம் சென்றது.
மரமொன்றில் இரு அலைகள் துள்ளுவதைப் பார்த்த பிறகே 
இதைச் சொல்ல வேண்டி வந்தது.`

-    இது மற்றது.

`அருங்காட்சியகத்தில் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தது எலி.
பூனையின் மீது இட்டுக்கட்டப்பட்டிருந்த புராதனமான குற்றச் சாட்டு
கூண்டுக்கு வெளியே பாதுகாப்பாக இருந்தது.`

இப்படிப் பல கற்பனைச் செயல்கள் றியாஸிடமுண்டு.

நம் சமகாலத்தில் ஒருபோது அதிக வியப்பை ஊட்டியவை சோலைக்கிளியின் கவிதைகள். மிகச் சாதாரணமான விசயங்களை, எளிய சனங்களின் வார்த்தைகளில் அசாதாரணமான முறையில் கவிதையாக்கியவர் சோலைக்கிளி. நேரிற் பேசுவதைப்போலத் தோற்றம்தரும் உணர வைக்கும் புழங்கு மொழிகளைப் பிரயோகித்து தனக்கென வாலாயப்படுத்தப்பட்ட ஒருவகையான மொழிதலில் தன்னுடைய கவிதைகளைத் தமிழில் ஏற்றினார் சோலைக்கிளி. ஆனால், சோலைக்கிளி முழுவதும் வாழ்க்கையையே எழுதினார். இனிக்க இனிக்க அதை அலுக்காமல் சலிக்காமல் எழுதித்தள்ளினார். இன்றும் சோலைக்கிளியின் கவிதைகள் வாழ்வை இனிக்க இனிக்கவே எழுத முயல்கின்றன.

றியாஸ் கனவுகளை அதிகமாக எழுதுகிறார். சோலைக்கிளிக்குப் பிறகு இன்னொரு புனைவிதமாக றியாஸ் குரானா, அகமது பைசால் ஆகியோர் வியப்புட்டும் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

படைப்பின் பொதுக்குணவியல்பு வியப்புட்டுவதாகும். அது யதார்த்தப் புனைவாக இருந்தாலும் சரி, மிகை யதார்த்தப் புனைவாக இருந்தாலும் சரி புனைவென்பது அடிப்படையில் வியப்புட்டும் ஒன்றே -  ஒரு நிகழ்வே. கற்பனையின் அடிப்படையே அதுதான். அது வடிவங்களையும் நியமங்களையும் தன்னுடைய எல்லைகளாகக் கொள்வதில்லை. எனவேதான் வியப்பு தீராத தன்மைகளை இடையறாது நிகழ்த்தி, தன்னை வியப்புட்டும் ஒன்றாக வைத்துள்ளது. 

அந்த வியப்பு சில போது தீராத புதிர்த்தன்மையைக் கொண்டிருக்கிறது. சிலபோது சட்டென உதிர்ந்து விடுகிறது. சிறுபராயத்து வியப்புகள் பல பின்னர் மிகச் சாதாரணமாகி விடுவதைப்போல சில கவிதைகளை றியாசும் எழுதுகிறார். இதை அவர் தவிர்க்கலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். இதை நான் அவரிடம் சொன்னேன். “இருக்கட்டும். அவையும் நான் எழுதிய கவிதைகள்தான்என்றார்  மிகச் சாதாரணமாக.

றியாஸிடம் எப்பொழுதும் அழுத்தமான தீர்மானம் உண்டு. தன்னுடைய கவிதைகள் தொடர்பாகவும் நிலைப்பாடு தொடர்பாகவும் றியாஸ் விட்டுக்கொடுப்புகளற்றவர். என்பதால் `நெகிழ்ச்சி குறைந்தவர் றியாஸ்` என்றொரு அபிப்பிராயம் சில நண்பர்களிடம் றியாஸைப்பற்றியுண்டு. இதை நானும் அவரிடம் அவதானித்திருக்கிறேன். மொண்ணைகள் நடுவே நிமிர்ந்து,  தருக்கி நிற்கும் வல்லமை கொண்ட கலைஞனே தன் ஆளுமையை தக்கவைத்துக் கொள்ள முடியும். தன் சுயமரியாதையைப் பேண முடியும். அதன் வழியாகவே அவன் தன் கலையையும், இலக்கியத்தையும் முன்னெடுக்க முடியும் என்று ஜெயமோகன் சொல்வதை நாம் றியாஸின் ஆளுமையுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

தன்னுடைய தீர்மானத்தின் வழியே நகர்வதிலும் செயற்படுவதிலும் உறுதியானவர் றியாஸ். இதை நான் அவருடைய கவிதைகளிலும் வாழ்விலும் காண்கிறேன். கற்பனை நிறைந்த புனைவு  மனதையுடையவர் கற்பனைச் செயலர் ஒருவர் எப்படி இத்தனை தீவிரமும் இறுக்கமுமாக இருக்கிறார் என்ற வியப்பு பல சந்தர்ப்பங்களிலும் மேலிடுகிறது. அப்படியென்றால் றியாஸின் கவிதைகள் மட்டுமல்ல அவரும் ஒரு புரிந்து கொள்ள முடியாத வியப்பே.

உன்னதமான கலையின் ருஷியும் அந்தக் கலையை உருவாக்கும் கலைஞனின் அடையாளமும் எப்போதும் வியப்பாகத்தானிருக்கும் வியப்புட்டியபடியேயிருக்கும்.




00