றியாஸ் குரானா
என்னை நினைத்தாள்
நினைத்த அக்கணத்திலே
படித்த புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து சென்றாள்
பக்க அடையாளத்தைப்போல உள்ளே சிக்கிவிட்டேன்
வாக்கியங்களாலான தெருவெங்கும் அலைந்து திரிகிறேன்
பாலைவன மணல்போல வெற்றிடங்கள்,
என்னைச் சூழ்ந்திருக்கின்றன
”இங்கே கொஞ்சம் இளைப்பாறலாம்” என்ற வாக்கியம்,
கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறது.
சொற்களுக்கிருக்கின்ற அர்த்தம் குறைந்து கொண்டிருப்பதை
அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அது மிகப் பயங்கரமானது
புத்தகத்தை அவள் திறக்காது வெளியேறும் சாத்தியம்
மறைக்கப்பட்டிருக்கிறதென்று ஊகிக்கிறேன்
முன்னேறி வந்தும்
அப்பக்கத்திலுள்ள கடைசி முற்றுப்புள்ளியை
கடந்து செல்ல முடியாதுள்ளது.
உஸ்…சொற்களை அமைதிப்படுத்துகிறேன்
நிசப்தத்தில் அவள் வருகின்ற காடிச் சத்தம் கேட்கிறது
பிராத்திக்கிறேன்
பலித்துவிட்டது
புத்தகத்தை கையிலெடுக்கிறாள்
திறக்கப்படப்போகிறது
விரல்கள் புத்தகத்தை தடவுகின்றன
திறந்துவிட்டாள்
அது வேறொரு பக்கமாக இருந்தது.
மீண்டும் என்னை நினைத்திருக்க வேண்டும்
மூடிவிட்டுச் செல்கிறாள்
ஒரே புத்தகத்தின் இரண்டு வெவ்வேறு பக்கங்களில்
மாட்டிக்கொண்டிருக்கிறேன்
இரு பக்கங்களுக்கும் பொதுவான சொற்களோ
ஒத்த கருத்துடைய சொற்களோ இருந்தால்,
இரு பக்கங்களுக்கும்
ஒரு தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கலாம்
அம்முயற்சி, பிளவுபட்டுக்கிடக்கும் நான்
இணைந்துவிடலாம் என்ற நம்பிக்கையைத் தரக்கூடியது
வேறு எவர் திறந்தாலும் வெளியேற வழிகளற்ற
ஒரு புத்தகத்தின் இரு வேறு பக்கங்களில்
அடைபட்டுக்கிடக்கிறேன்.
சொற்களோடு வசிப்பதுதான் உலகில் பெரும் கொடுமை
அர்த்தங்கள் வேகமாக அழிகின்றன
எழுத்து இனம் அருகிச் செல்கிறது
யாராவது, இந்த இரு பக்கங்களையும்
மனனம் செய்துவிடுங்கள்
அல்லது ஒரு முறை பக்கங்களைத் திறந்து
அவளை வாசிக்கச் சொல்லுங்கள்
என்னைக் காப்பாற்ற வேறு வழிகளில்லை
உங்களைக் கடந்து செல்லும்
எந்தப் பெண்ணுமாக அவளிருக்கலாம்.